ரஜப் மாதத்தில் ஏதேனும் சிறப்பான வணக்கவழிபாடுகள் உள்ளனவா?


 காதுகேலாத ரஜப் என்று கூறப்பட்டதற்கான காரணம்:


ஏனெனில்இந்த மாதத்தில் ஆயுதங்களின் சப்தங்கள் கேட்கப்படாது என்ற காரணத்தினாலாகும்.




ரஜப் மாதத்தில் ஏதேனும் சிறப்பான வணக்கவழிபாடுகள் உள்ளனவா?


ரஜப் மாதத்தில் மாத்திரம் குறிப்பான பிரத்தியேகமான வணக்கவழிபாடுகள் என்ற ஒன்று குறிப்பிடப்பட்டதாக வரவில்லை.


அதிலே சில ஸலவாத்துக்கள் என்றும் பிரார்த்தனைகள் என்றும் வரக்கூடிய அறிவிப்புக்கள் அனைத்துமே ஆதாரபூர்வமற்றது.


அவைகளைப் பற்றி கீழே விளக்கமாகப் பார்ப்போம்.


அல்ஹாபில் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:


"ரஜப் மாதத்தின் சிறப்பு சம்பந்தமாகவோ அல்லது அதிலே நோன்பு நோற்பது சம்பந்தமாகவோ அல்லது அவைகளில் குறிப்பிட்ட சில நோன்புகள் நோற்பது பற்றியோ அல்லது அதிலே குறிப்பிட்ட இரவில் நின்று வணங்குவது சம்பந்தமாகவோ எந்தவித ஆதாரபூர்வமான ஹதீஸ்களோ வரவில்லை.


மேலும் "அல்ஹாபில் அபூ இஸ்மாஈல் அல்ஹரவி" அவர்களும் எனக்கு முன்னர் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள்."


(தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் - இப்னு ஹஜ்ர் - பக்கம் 23)


இன்னும் கூறினார்கள்:


ரஜப் மாத சிறப்பைப் பற்றியோ அல்லது அதில் நோன்பு நோற்பது பற்றியோ அல்லது அதில் சில நாட்கள் தெளிவாக நோன்பு நோற்பது பற்றி வரக்கூடிய ஹதீஸ்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:


ஒன்று பலவீனமானது மற்றையது இட்டுக்கட்டப்பட்டது.


(தப்ஈனுல் உஜுப் பிமா வரத பீ ஷஹ்ரி ரஜப் - இப்னு ஹஜ்ர் - பக்கம் 23)


ரஜப் மாதத்தில் செய்யக்கூடிய பித்அத்தான செயற்பாடுகள்


மக்கள் மத்தியிலும்அதிகமான இஸ்லாமிய நாடுகளிலும் இந்த மாதத்துடன் தொடர்பான சில பித்அத்கள் மக்கள் மத்தியில் பரவியுள்ளன. அவைகளில் சில பித்அத்கள்.


முதலாவது


அர்-ரஆஇப் தொழுகை


இது வெறுக்கத்தக்க ஒரு பித்அத்தான தொழுகையாகும்.


இமாம் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:


"வெறுக்கத்தக்க விடயங்கள் நிரம்பிய அருவருப்பான மிகவும் வெறுக்கத்தக்க பித்அத்தான தொழுகையாகும். எனவே அதனை விடுவதும் அதனை புறக்கணிப்பதும் அவசியமாவதுபோல் அதனை செய்பவர்களையும் வெறுக்கவேண்டும்.


(பதாவா அல்இமாம் அந்நவவி -பக்கம் 63.)


இமாம் இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:


(அர்-ரஆஇப் தொழுகையைப் பொருத்தவதை அது எந்தவித அடிப்படையும் கிடையாது. அதுமாத்திரமின்றி அது ஒரு பித்அத் ஆகும். அத்தொழுகையை தனியாகவோகூட்டாகவோ தொழுவதற்கு விரும்பத்தக்கதல்ல)


(மஜ்மூஉல் பதாவா 23-132)


இரண்டாவது


ரஜப் மாதத்தை நோன்பைக்கொண்டோ அல்லது இஃதிகாப் இருப்பதைக் கொண்டோ சிறப்பிப்பது.


சில மனிதர்கள் ரஜப் மாதத்தை நோன்பைக் கொண்டும் அல்லது இஃதிகாபைக் கொண்டும் சிறப்பிப்பது சில பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையிலேயாகும்.


இப்னு ரஜப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:


"ரஜப் நோன்பைப் பொருத்தவரை நபியவர்கள் மூலமகவோ அல்லது ஸஹாபாக்கள் மூலமாகவோ ரஜப் நோன்பின் சிறப்பு என்று குறிப்பிட்டு வரக்கூடிய எவைகளும் ஆதாரபூர்வமற்றதாகும்."


(லதாஇபுல் மஆரிப் -பக்கம்118)


இப்னு தைமியா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:


"ரஜப் மற்றும் ஷஃபான் மாதங்களைநோன்பைக் கொண்டோ அல்லது இஃதிகாபைக்கொண்டோ சிறப்பிப்பது சம்பந்தமாக நபியவர்களைத்தொட்டோ அல்லது ஸஹாபாக்களைத்தொட்டோ அல்லது இமாம்களைத் தொட்டோ ஒருவிடயமும் வரவில்லை."


(மஜ்மூஉல் பதாவா :25-290.)


எச்சரிக்கை


குறிப்பாக ரஜப் நோன்பு சிறப்பு பற்றி வரவில்லை என்பதின் கருத்து என்னவென்றால் அம்மாதத்தில் மேலதிக சுன்னத்தான நோன்புகள் கிடையாது என்பதல்ல மாறாக ஆதாரங்களின் அடிப்படையில் வேறு மாதங்களில் நோற்கக்கூடிய சுன்னத்தான உபரியான நோன்புகள் இம்மாதத்திலும் நோற்கப்படும்.


அந்த உபரியான நோன்புகள் ரஜப் மாதம் மற்றும் ஏனைய மாதங்களில் நோற்கப்படக்கூடிய பொதுவான நோன்புகளாகும்.


மேலும் இம்மாதத்தில் நோன்பு நோற்பது தடுக்கப்படுவதை 03 அடிப்படைகளில் பார்க்கலாம்


1- முஸ்லிம்கள் ஒவ்வொரு வருடமும் இம்மாதத்தில் நோன்பு நோற்பதை பிரத்தியேகமானதாக ஆக்கியிருந்தால்.


2- உபரியான சுன்னத்தான நோன்புகளைப்போன்று இம்மாதத்திலும் பிரத்தியேகமான சுன்னத்தான நோன்புகள் நபியவர்களின் ஆதாரபூர்வமான வழிகாட்டலின் அடிப்படையில் வந்துள்ளன என்று உள்ளத்தால் ஏற்றுக்கொண்டு செயற்படுதல்.


3. இம்மாதத்தில் நோற்கப்படக்கூடிய நோன்புகளுக்கு மற்ற மாதங்களைவிட பிரத்தியேகமான சிறப்பான கூலிகள் உள்ளன என்று உறுதிகொள்ளல்.


மூன்றாவது


அல்-இஸ்ராஃ வல்-மிஃராஜ் தினத்தை அடிப்படையாகக்கொண்டு விழா கொண்டாடுதல்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவிலிருந்து அக்ஸா பள்ளிவாயல் வரை இரவோடிரவாக இஸ்ராஃ பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்து ஏழு வானங்களுக்கு மேல் உயர்த்தப்பட்டது அவர்களுக்கு அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்ட பாரிய அற்புதங்களில் ஒன்றாகும். இத்தினத்தை (இஸ்ராஃ - மிஃராஜ்) ஞாபகப்படுத்தும் நோக்கில் சில -நாடுகளில் ரஜப் மாதம் 27 ஆம் இரவன்று விழாகொண்டாடுவது பரவிக்காணப்படுகின்றது.

Comments