சக்திக்கு அப்பாற்பட்ட சட்டத் திணித்தல் இல்லை
மதத்தின் பெயரால் சமூகத்தில் திணிக்கப் பட்டுள்ள சட்டங்கள் ஏராளம். அதில் குறிப்பாக திருமணச் சட்டங்களைக் கூறலாம். திருமண வாழ்க்கை ஒரு சிற்றின்பம். அதை விடுத்து துறவு சந்நியாசம் மேற்கொள்வதே அறம், விவாகரத்து கூடாது, மறுமணம் கூடாது, பலதார மணத்திற்கு அனுமதியில்லை இவ்வாறு அணுஷ்டிக்க இயலாத பல்வேறு வகையான சட்டங்கள் மக்களிடம் திணிக்கப்படுவதால் அவற்றைச் செயல்படுத்த இயலாமற் போய் சட்டங்களில் ஓட்டை-உடைசல்களை ஏற்படுத்த பலர் முனைவதைப் பார்க்கலாம். -
சட்டப்பூர்வமாக திருமணம் செய்ய இயலாதவர்கள் அச்சட்டங்களை மீறுவதையும் வேலி தாண்டுவதையும் சட்டத்தில் விரிசல்களை ஏற்படுத்துவதையும் பார்க்கின்றோம். இது போலவே புலால் உண்ணாமை என்கிற சட்டம். இது பனிபடர்ந்த பகுதிகளில் சாத்தியமாகுமா? அண்டார்டிக் போன்ற கடல் பிரதேசப் பகுதிகளில் காய்கறிகளுக்கு எங்கே போவது?ஜீவகாருண்யம் என்ற தத்துவம்
யாருக்காவது சாத்தியமாகுமா? சுத்த சைவர்கள் நம்பியிருக்கும் விவசாயங்களில் விதைகளுக்கும் உரங்களுக்கும் ஆகும் செலவினத்திற்கு சற்றும் குறையாமல் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கும் செலவிடப்படுகின்றதே! இங்கு புழுப்பூச்சிகளுக்காக ஜீவகாருண்யம் பேசினால் பழுத்த விவசாயிகளின் வாழ்க்கை என்னாகும்? அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தானே நாம் சோற்றில் கை வைக்க முடியும்! இனி அந்த ஜீவன்களுக்காக யார் காருண்யம் பேசுவது? தொல்லை தரும் கொசுக்கள், மலேரியா போன்ற வியாதிகளைப் பரப்பும் பாக்டீரியா - வைரஸ்கள் முதலான இலட்சோபலட்சக் கிருமிகளை அன்றாடம் அழித்தொழிக்கும் நிலை மட்டும் இல்லையெனில் நாம் சுகாதாரக் கேட்டிற்கு ஆளாக வேண்டியது வராதா?
பசு வதைத் தடைச்சட்டம் பற்றி வாய் கிழிய பேசுபவர்கள் பால், மோர், தயிர், வெண்ணெய், நெய் ஆகியவற்றில் சிலவற்றையோ அல்லது பலவற்றையோ தமது அன்றாட உணவுகளில் தவிர்ப்பதோ தவிர்க்க முடிவதோ இல்லையே! அது எப்படி?
பட்டாடைகளால் பரிவட்டம் கட்டுபவர்களுக்குப் பட்டுப் புழுக்களின் வாழ்க்கை அழிவதைப் பற்றிய கவலையில்லை. தேனீயைக் கொன்று தேனெடுத்து அபிசேகம் செய்பவர்கள் தேனீக்காக பரிந்து பேசுவதில்லை. மனிதர்களில் ஜாதி பேதம் பார்ப்பவர்களுக்கு மற்ற பிராணிகளிலும் அதே கண்ணோட்டம் வெளிப்படுகின்றது. அதனால்தானே பசுவும் எருமையும் பால்தான் தருகின்றன என்றாலும் பசுவை கோமாதா என்று போற்றுபவர்கள், எருமையை எமன் வாகனம் என்று தூற்றுகின்றனர்.
எனவேதான் இஸ்லாம் மனிதனின் உடற்கூறுகள், மனோ இயல்புகள், காலச் சூழ்நிலைகள், தட்ப-வெப்ப நிலைகள், வாழும் பகுதிகள் அனைத்திற்கும் பொருத்தமான சட்டங்களை வகுத்தளித்துள்ளது.
"அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சிரமப்படுத்துவதில்லை" அல்குர்ஆன் (2:286) கூறுவதைக் கவனியுங்கள்!
Comments
Post a Comment