வெளிப்படையைக் கொண்டுதான் முடிவெடுக்க வேண்டும்!


 வெளிப்படையைக் கொண்டுதான் முடிவெடுக்க வேண்டும்


பொது விவகாரங்களில் அந்தரங்கம், வெளிப்படை என்று கூறி எதார்த்தத்தைப் போட்டு சிலர் குழப்பிக்கொள்வர் சிலர் அருள்வாக்கு கூறுவதாகப் பிதற்றிக்கொண்டு எதையாவது உளறுவர். அது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் "அவனது கூற்றில் வெளிப்படையாக: பிழைகள் தென்பட்டாலும் அதன் உள்ளார்ந்த கருத்தை நோக்கும்போது..." எனச் சிலர் சப்பைக் கட்டுவார்கள்.


எதுவும் சந்திக்கு வந்துவிட்டால் அதில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது. ஜாடை-மாடைகள், சிலேடைகள் எல்லாம் இலக்கிய இரசனையோடு நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும். முடிவுகளைத் தீர்மானித்தல், சட்டங்களைப் பிறப்பித்தல், அவற்றிற்குச் செயல் வடிவம் கொடுத்தல் போன்ற தீர்க்கமான விவகாரங்களில் வெளிப்படையை மட்டுமே பிரதான அடிப்படையாகக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நிரபராதிகள் குற்றவாளிகளாக ஆக்கப்படுவதும் நியாயங்கள் காயப்படுத்தப்படுவதும் அநியாயங்கள் அரசோற்று வதும் சர்வசாதாரணமாகிவிடும். அந்தரங்கங்களை ஆராய்வதும் மனித சக்திக்குட்பட்டதல்ல. ஒரு மனிதனுடைய அந்தரங்கத்தை இன்னொரு மனிதன் துல்லியமாகத் தீர்மானிக்க இயலுமாயின் அதை அந்தரங்கமென எங்ஙனம் கூற இயலும்?


தமக்கு வேண்டிய நபர்களிடமிருந்து வெளிப்படும் பாதகங்களுக்கு உள்ளர்த்தங்களைத் தோண்டியெடுத்து அவற்றை நியாயப்படுத்துவதும் வேண்டாதவர்களின் உயர் தொண்டுகளுக்குக் கூட உள்நோக்கங்கள் கற்பித்து அவற்றைக் கொச்சைப் படுத்துவதும் காலங்காலமாக நடந்துவரும் கயமைத் தனங்கள். இந்த விஷயத்திற்கும் “உள்ளங்களில் உள் ளவற்றை இறைவனே அறிவான்” எனும் குர்ஆனின் கூற்று மூலம் இஸ்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறது.


எதற்கும் அந்தரங்கம் கற்பிப்பதன் விபரீதம் யாதெனில் கொலை, கொள்ளை, வாக்கு மீறுதல், கற்பழித்தல் போன்றவற்றிற்குக்கூட சிலர் அந்தரங்கக் காரணங்கள் கற்பித்துத் தப்பிக்கப் பார்க்கிறார்கள். இவற்றிற்குப் புராண சான்றுகளைப் பார்க்கலாம். - இதிகாசங்களில் ஏராளமான


நல்ல காரணம் மற்றும் நன்மையான காரியங்களுக்காக பொய் சொல்லலாம் என்றும் சிலர் தத்துவம் பேசுவர். பொய்யென்ன, போரே செய்பவன்கூட அதற்குத் தன் பக்கத்து நியாயம் கற்பிப்பானே! பொய் சொல்ல முன்வந்து விட்ட ஒருவனுக்கு அது நன்மைக்காகவே தான் சொல்லப்பட்டது என்றுப் புனைந்துரைப்பதற்கு என்ன, சொல்லியா கொடுக்க வேண்டும்?


அதனால்தான் தவிர்க்க இயலாத மூன்று சந்தர்ப்பங்களைக் குறிப்பிட்டு அவற்றில் மாத்திரம் பொய்யை அனுமதிக்கிறது இஸ்லாம்: கணவன் மனைவி பரஸ்பரம் ஒருவரையொருவர் பாராட்டி மகிழ்வித்தல், போர்முனை, பிரிந்துவிட்ட இரு சாராரை இணைத்தல். (முஸ்லிம்)


அது போலவே தவறு யாரிலிருந்து வெளிப்பட்டாலும் அதைத் தவறாகவே கருதச் சொல்கிறது இஸ்லாம்: சால்ஜாப்புகளுக்கு இதில் இடமளிக்கவில்லை.


இப்ராஹீம் (அலை) என்றொரு இறைத்தூதர் அந்தத் தனி மனிதரைக் குர்ஆன் ஒரு சமுதாயம் என்றே வருணிக்கிறது. அவரைப் பற்றி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, அவர் தமது வாழ்க்கையில் மூன்று பொய்கள் மட்டும் கூறியுள்ளார் எனக் குறிப்பிட்டார்கள். அந்த மூன்று பொய்களும் எப்படிப்பட்ட கட்டங்களில் கூறப்பட்டவை என்பதை நோட்டமிட்டால் அவற்றைப் பொய் என்று நமது வழக்கில் கூறவேமாட்டோம். ஆனாலும் அவற்றை நபி(ஸல்) பொய்களென சுட்டிக்காட்டத் தவறவில்லை.


மிக்தாத் பின் அஸ்வத் (ரழி) என்றொரு நபித்தோழர் இறைத்தூதரிடம் வந்து, “இறைத்தூதரே! இறை நிராகரிப்பாளர்களில் ஒருவன் என்னிடம் சண்டையிடும்போது எனது ஒரு கையை வெட்டித் துண்டாக்கிவிட்டு ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து கொள்கின்றான். அப்போது, இஸ்லாத்தின் ஏகத்துவ (கலிமா) வாக்குமூலத்தை மொழிந்து "இதோ நான் முஸ்லிமாக ஆகிவிட்டேன்!" என்றும் கூறுகின்றான். இவ்வாறு சொன்ன பிறகு நான் அவனைக் கொலை செய்யலாமா?" என்று கேட்கிறார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவரைக் கொல்லக் கூடாது!" என்றார்கள். அதற்கவர், "இறைத்தூதரே! அவர் எனது கையை வெட்டித் துண்டாக்கி விட்டாரே!" எனக் கேட்ட போது, “நீர் இப்போது அவரைக் கொலை செய்தால், நீர் அவரைக் கொல்வதற்கு முன்னால் நீர் இருந்த அந்தஸ்த்தில் அவரும், அவர் கலிமா (வாக்குமூலம் - உறுதிமொழி ) சொல்வதற்கு முன்னால் இருந்த நிலையில் நீரும் ஆக வேண்டியது வரும்!"


என்பதாக நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)


இதே போல் இன்னொரு நிகழ்ச்சி. உஸாமா பின் ஸைத் (ரழி) என்ற நபித்தோழர் அறிவிக்கிறார்: ஒரு போரில் என்னிடம் ஓர் எதிரி மாட்டிக் கொண்டான். அப்போது அவன் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' வணக்கத்திற்குத் தகுதியானவன் உண்மையில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று (கூறி முஸ்லிமாகிவிட்ட தாகக்) கூறினான். அதற்குப் பிறகும் நான் அவனைத் தாக்கிவிட்டேன். அது எனக்கு நெருடலாகவே இருந்ததால் இறைத் தூதரிடம் அது பற்றி நான் வினவியபோது அதற்கவர்கள், 'அவன் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாக்குமூலம் கூறிய பின்புமா கொலை செய்தீர்?" எனக் கேட்டார்கள். 'இறைத் தூதரே! எனது ஆயுதத்தைக் கண்டு பயந்துதான் அவன் கலிமா சொன்னான்" என நான் கூறியபோது, “நீர் அவனது உள்ளத்தைப் பிளந்து பார்த்தீரோ?” எனக் கேட்டார்கள். (நூல்: முஸ்லிம்)


எதையும் வெளிப்படையாகத்தான் அணுக வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக் கொள்ளாத வரை எதற்கும் மாற்று அர்த்தம் கற்பிக்க யாருக்கும் உரிமையில்லை.


பொது விவகாரங்களில் எந்த ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது. எதையும் வெளிப்படையாக பரிமாறிக் கொண்டால் பாரபட்சம், ஏற்றத்தாழ்வு, அநீதி, அக்கிரமங்கள், சட்டமீறல் ஏமாற்று வித்தைகளும் அழிந்து போகும். என எல்லா


கனவுகளையும் சுயமான சில கற்பனை களையும் எங்கள் மத நம்பிக்கை என்று கூறி நீதி மன்றங்களையும் ஆக்கிரமிக்கும் மத வாதிகள் இஸ்லாத்தின் இந்தப் பண்பாடுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

Comments